தமிழகத்தில் மருத்துவ சேவை பாதிப்பு: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். பல்வேறு அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரித்தல், மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது.
மருத்துவமனைகளின் பாதுகாப்பு அம்சங்கள்: அடுக்கிய அமைச்சர்: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் தாக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவர் பாலாஜியை வியாழக்கிழமை காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த அக்டோபர் 8-ம் தேதி முதல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 நிறங்களைக் கொண்ட கையில் கட்டிக்கொள்ளும் வகையில் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இந்த நடைமுறை படிப்படியாக 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், 320 வட்டார அரசு மருத்துவமனைகளிலும், அடையாள அட்டை நோயாளர்களின் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுவது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நிலையே உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள்ளாகவே புறநோயாளிகள் சேவை முடிக்க வேண்டும். எனவே, இதுபோன்ற இடங்களில் மெட்டல் டிடெக்டர் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஒரு சில இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதனிடையே, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், சென்னையில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்கனவே பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இரவு பணியில் இருக்கும் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரோந்து மற்றும் கண்காணிப்பில் கூடுதல் போலீஸார் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் கவனத்துக்கு வந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் முதல்வர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
“சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள்” - இபிஎஸ் கண்டனம்: “மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழக அரசோ வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறது. இப்பணியை மேற்கொண்ட மாணவர்களை பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்துள்ளன. மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம். இப்பணிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்களை பயன்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“படிக்காததால் அது வெற்று புத்தகமாக தெரிகிறது” - ராகுல் பதிலடி: “பொதுக்கூட்டங்களில் நான் காட்டும் அரசியல் சாசன புத்தகத்தில் வெற்றுப் பக்கங்கள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். நரேந்திர மோடிக்கு அரசியல் சாசனம் காலியாக உள்ளது. ஏனென்றால் அவர் அதைப் படிக்கவில்லை” என ராகுல் காந்தி பதிலடி வழங்கியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் தேசிய விருது: காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின்போது, டொமினிகாவுக்கு 70 ஆயிரம் டோஸ் தடுப்பூசியை இந்தியா வழங்கியது. அதோடு, டொமினிகாவின் சுகாதரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அறிவித்துள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு: சென்னையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மேலும் குறைந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6935-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் ரூ.55,480-க்கு விற்பனையானது. கடந்த 2 வாரங்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,160 வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘தனியார் பேருந்து இயக்கத்தால் ரூ.50 கோடி இழப்பு’: சிறப்பு இயக்கத்தில் தனியார் பேருந்துகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பு விவரங்களை சுட்டிக்காட்டி, போக்குவரத்து அமைச்சருக்கு சிஐடியு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சிறப்பு இயக்கத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.30-க்கு மேல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு வருவாய் கிடைப்பதை தவிர்த்து, தனியார் பேருந்துகளை இயக்கியதால் கழகங்களுக்கு சுமார் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது எவ்விதத்திலும் நியாயமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டலகால பூஜை இம்மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வெள்ளிக்கிழமை மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி: தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ, சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இதுபோன்ற பிதற்றல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற செய்தியை, சம்பந்தப்பட்ட அனைவரும் அறிய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியும். கேவலமான மற்றும் தரக்குறைவான அறிக்கை வெளியிடுபவர்கள், பேசுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டால், அதிலிருந்து தப்ப மன்னிப்பு கோரினாலும், இனி ஏற்கப்படாது என்ற வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். இல்லையெனில் யார் வேண்டுமானாலும் வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிவிட்டு, அதிலிருந்து தப்புவதற்காக மன்னிப்பு கோரலாம் என்றாகிவிடும். வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கான விளைவுகளை அவசியம் எதிர்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
முன் ஜாமீன் மறுப்பைத் தொடர்ந்து, மதுரை - திருநகர் போலீஸார் அடங்கிய தனிப்படையினர், நடிகை கஸ்தூரியை தேடி வருகின்றனர். சென்னை பகுதிக்கும் தனிப்படை ஒன்று விரைந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.