கோத்தகிரியில் தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை உயிரிழப்பு - பெற்றோர் குற்றச்சாட்டு

By ஆர்.டி.சிவசங்கர்

கோத்தகிரி: கோத்தகிரியில் தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை உயிரிழப்புக்கு தடுப்பு மருந்துதான் காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட குண்டாடா பிரிவு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் கலைச் செல்வி, மணிகண்டன் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் இரண்டாவது மகன் ஜெஸ்வின் என்ற பத்து மாத குழந்தைக்கு கோத்தகிரி கட்டப்பட்டு அருகே செயல்பட்டு வரும் குடுமணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்திய சிறிது நேரத்தில் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அவரது தாய் மற்றும் உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், இதயத் துடிப்பு குறைவாக இருப்பதாக கூறி, மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து குழந்தையின் தாய் கூறும்போது, “குழந்தைக்கு எவ்வித உடல் பாதிப்பும் இல்லை. தடுப்பூசி செலுத்திய பிறகு குழந்தை இறந்துள்ளது. குழந்தையின் இறப்பில் மர்மம் உள்ளதால், எங்களுக்கு தகுந்த தீர்வு கிடைக்க வேண்டும். தடுப்பூசியில் செலுத்திய மருந்தே காரணம்” என்றார்.

இச்சம்பவம் குறித்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கோட்ட மருத்துவர் முதன்மை அதிகாரி ரவிசங்கர் கூறியதாவது: “கோத்தகிரி மருத்துவமனையில் இருந்து குழந்தையை உதகைக்கு அழைத்து வரும்போது, குழந்தைக்கு அதிக அளவில் மூச்சுத் திணறல் இருந்தது. மருத்துவமனைக்கு கொண்டு வந்த 10 நிமிடத்திலேயே குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் இறப்பிற்கான காரணம் உடற்கூறு ஆய்வுக்கு பிறகே தெரியவரும். உடற்கூறு ஆய்வின்போது சிடி ஸ்கேன் ஆய்வு, மூளை பகுதியில் ஆய்வு, மருந்தில் ஏதாவது தவறு உள்ளதா அல்லது வேறு காரணமா என்று தெரிய வரும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE