திருச்சி: "அரசு மருத்துவமனைகளில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கென தனியாக காவலர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என கடந்த 2012ம் ஆண்டில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் வெளியான அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்" என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில பொருளாளர் அருளீஸ்வரன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) திருச்சி கிளை சார்பில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்புப்பட்டை அணிந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க மாநிலப் பொருளாளர் த.அருளீஸ்வரன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் ஏ.தங்கவேல், அவைத்தலைவர் எம்.முத்துராஜா, ஐஎம்ஏ திருச்சி கிளைத் தலைவர் அஷ்ரப், முன்னாள் மாநிலத் தலைவர் குணசேகரன், கிளைச் செயலாளர் முகேஷ் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். டாக்டர் டி.எம்.பிரபு நன்றி கூறினார்.
» வந்தே பாரத் ரயிலை தனியார் தயாரிப்பதால் ரூ.100 கோடி வீண் - கண்ணையா குற்றச்சாட்டு
» புதுவையில் ரூ.3 கோடி மதிப்பில் ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்
முன்னதாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க பொருளாளர் த.அருளீஸ்வரன் கூறியது: "மருத்துவர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடரும். அரசிடம் இருந்து உறுதியான அறிவிப்பு வெளியாகும் வரை, திருச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள், ஆய்வு கூட்டங்கள், வெளிப்புற மருத்துவ முகாம் பணிகள் செல்வது, காப்பீடு திட்டப் பணிகள், வகுப்புகள் எடுப்பது, தினசரி அறிக்கை அனுப்பும் பணிகள் ஆகியவற்றை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும். நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டும் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் சங்கம் சார்பில் ஆன்லைன் மூலம் நாளை நடைபெறும் செயற்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும். அரசு மருத்துவ மனைகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். சிக்கலான சிகிச்சை மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆயுதம் தாங்கிய காவல்கள் பணியமர்த்தப்பட வேண்டும். கடந்த 2012ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு மருத்துவமனைக்கென தனியாக காவலர்கள் பணி நியமனம் செய்யப் படுவார்கள் என அறிவித்தார். அந்த அறிவிப்பை நடைமுறைப் படுத்த வேண்டும்" என்று அருளீஸ்வரன் கூறினார்.