மதுரை அருகே ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழா: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு 

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில் இன்று இரண்டு ஆண்டுக்கொரு முறை நடைபெறும் ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழா நடைபெற்றது. இதில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில் முத்தாலம்மன் கோயில் (ஏழூர் அம்மன்) சப்பரத் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறுகிறது. இதில் முத்தாலம்மன் தேவன் குறிச்சியில் ஆதிபராசக்தியாகவும்,, டி.கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமி, வை.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, பாவடிப்பட்டி என்ற கிளாங்குளத்தில் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக கிராம மக்கள் வழிபடுகின்றனர்.

ஏழுர் அம்மன் திருவிழா நவ.12-ல் தொடங்கியது. அம்மாபட்டியில் ஏழூருக்குரிய அம்மன் சிலைகள் களிமண்ணால் உருவாக்கப்பட்டது. அம்மாபட்டியை தவிர மற்ற கிராமங்களில் சப்பரங்கள் தயாரிக்கும் பணி ஒருவாரத்திற்கு முன்பு தொடங்கியது. மரக்கட்டைகள், வண்ண காகிதங்களால் 50 அடி உயரத்திற்கு மேலுள்ள சப்பரங்களை வடிவமைத்தனர்.

இன்று காலையில் தங்களது கிராமங்களுக்குரிய அம்மன்களை கொண்டு செல்லும் வகையில் ஆறு கிராமத்தினர் சப்பரங்களை தலைச்சுமையாக சுமந்து அம்மாபட்டியில் ஒன்று கூடினர். இதில் லட்சக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர். அங்கிருந்து தங்களது கிராமங்களுக்குரிய அம்மன்களை சுமந்து சென்றனர். தங்களது கிராமங்களில் வைத்து வழிபட்டு திருவிழா கொண்டாடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE