திருப்பூர்: சென்னையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
இதில், 130 மருத்துவர்கள் மற்றும் 70 பயிற்சி மருத்துவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசு மருத்துவமனையில் போதிய பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் புற நோயாளிகள் பிரிவில், பொதுமக்கள் யாரும் இன்றி வெறிச்சோடியதால், வழக்கமான கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டது.