கோவையில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

By ஆர்.ஆதித்தன்

கோவை: சென்னையில் டாக்டர் மீது தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் டாக்டராகப் பணியாற்றி வருபவர் பாலாஜி (53). இவரை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் டாக்டர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின் பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதனிடையே தமிழகம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் செயலாளர் பாரதி ராஜா, நிர்வாகிகள் ரவிசங்கர் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் உட்பட 400 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில செயலாளர் கார்த்திக் பிரபு, கோவை கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கனகராஜ் கூறும்போது, "அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு டாக்டர்களை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. மாறாக அவசர சிகிச்சைக்கு வருவோர் மற்றும் அறுவை சிகிச்சை, பிரேத பரிசோதனை பரிசோதனை நடைமுறைகளில் டாக்டர்கள் பணிபுரிந்து வருகிறோம்" என்றார்.

இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில செயலாளர் கார்த்திக் பிரபு கூறும்போது, "அரசு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் உள்ளது. இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 4500 புறநோயாளிகள் வருகின்றனர். இதனிடையே அரசு மருத்துவ மனையில் டாக்டர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டிருப்பதால் புறநோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெறாமல் அவதிக்குள்ளாகினர்.

இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் தலைமையில் 125 டாக்டர்கள் மற்றும் 50 மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். டாக்டர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டதால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE