முதல்வர், அமைச்சர்கள் தலையீட்டால் போலீஸார் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: முதல்வர், அமைச்சர்கள் தலையீடு இருப்பதால் போலீஸார் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை. மக்கள், எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, நாளை எம்பி, அமைச்சர்களுக்கும் ஏற்படும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேரு சிலைக்கு மாலை அணிவித்த பிறகு முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கரன் அலுவலகத்துக்கு வந்து அவருக்கு ரவுடி ராமு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். வியாபாரிகள் புகார் தந்ததால் உழவர்கரை ஆணையரிடம் நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தியதுதான் ரவுடி மிரட்டலுக்கு காரணம்.

ரவுடி ராமு மீது 21 வழக்குகள் உள்ளது. அதில் பத்து கொலை வழக்குகள். அவர் முதல்வர் தொகுதியைச் சேர்ந்தவர். 21 வழக்குகள் உள்ள ரவுடி ராமு வெளியில் நடமாடுகிறார். பத்து வழக்குகளுக்கு ஜாமீனே அவர் எடுக்கவில்லை. போலீஸை கட்டிப்போட்டது யார்?. ரங்கசாமியும், நமச்சிவாயமும் காவல்துறையை செயல்படவிடாமல் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படசொல்வதால் போலீஸார் கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றனர். முதல்வர், அமைச்சர்கள் தலையீடு உள்ளதால் போலீஸார் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை.

கொலை, கொள்ளை, பாலியல் புகார்கள், வீடு அபகரிப்பு, சொத்து அபகரிப்பு, செயின்பறிப்பு, வழிபறி தொடர்ந்து நடக்கிறது. முதல்வராக ரங்கசாமி வரும்போது தொடர்ந்து இதுபோல் நடக்கும். காங்கிரஸ்- திமுக கூட்டணியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தோம். ரவுடிகளை சிறையில் தள்ளினோம்.போலீஸார் சுதந்திரமாக செயல்படாமல் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாது. சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்களை மிரட்டுகின்றனர். மக்கள், எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நாளை எம்பி, அமைச்சர்களுக்கும் ஏற்படும். இந்த ஆட்சியால் பயன் என்ன- ராஜினாமாவை முதல்வர், அமைச்சர்கள் செய்யவேண்டும் என்றார்.

முன்னதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டம் ஒழுங்கு புதுச்சேரியில் இல்லை. இது குறித்து முதல்வர் கவலைப்படுவதும் இல்லை. முதல்வர், அமைச்சர்களை பாதுகாக்கதான் போலீஸார் உள்ளனர்.

மக்களுக்காக அல்ல. போக்குவரத்தை மக்களுக்கு சீரமைக்காமல் முதல்வர், அமைச்சர்கள் வந்தால்தான் சீரமைப்பில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வியாபாரிகளுக்கும், பெண்களுக்கும் எங்கு பாதுகாப்பு தருகிறார்கள். தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை தரவில்லை. தீபாவளி உதவித்தொகை தரவில்லை. ரங்கசாமி அறிவிப்பு முதல்வர்தான். இதுதவிர அவருக்கு ஏதும் தெரியாது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE