சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின்  வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

By டி.ஜி.ரகுபதி

சென்னையிலும், கோவையிலும் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று, வருமானம் ஈட்டியதாக கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டினுக்கு சொ்நதமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக மார்ட்டின் முதலீடு செய்திருப்பதையும் கண்டறிந்தனர்.

இதனால் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது, மறுபுறம் விசாரணை செய்து கொண்டு, மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தினர். கடந்த 2019, 2021-ம் ஆண்டுகளில் மொத்தம் ரூ.277.59 கோடி, 2022-ம் ஆண்டு ரூ.173.48 கோடி மதிப்புகளில் அசையும், அசையாத சொத்துகளை முடக்கியது.

பின்னர், கடந்தாண்டு மே மாதம் மீண்டும் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி ரூ.456.86 கோடி மதிப்பிலான அசையும், அசையாத சொத்துகளை முடக்கினர். அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்தாண்டு அக்டோபரில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று (நவ.14) மீண்டும் சோதனை நடத்தினர்.

கோவையில் மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள மார்ட்டினின் வீடுகள் உள்ளன. இதன் அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோ பதி கல்லூரி ஆகியவை உள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளகிணறு பிரிவில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டுக்கு வந்து சோதனையை தொடங்கினர். அதேபோல் அருகேயுள்ள அவரது கார்ப்பரேட் அலுவலகம், கல்லூரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடத்தப்படும் இடங்களில் உள்ளவர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE