தமிழகம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்

By KU BUREAU

சென்னை: மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, நவ.14-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அவசர சிகிச்சையை தவிர்த்து அனைத்துவிதமான மருத்துவ சேவைகளையும் நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு
டாக்டர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்படும்.

மருத்துவர் மீதான கடுமையான தாக்குதலை கண்டிக்கவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கவும், வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும். முன்னதாக அரசு மருத்துவர் சங்கங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தாலும், அதற்கான ஆணைகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று இந்திய மருத்துவ சங்கம் உள்பட பல்வேறு மருத்துவர் சங்கங்களும் ஒரு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. சென்னையில் மருத்துவர் சங்கங்களுடனான ஆலோசனைக்கூட்டத்துக்கு பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அரசு மருத்துவர்கள் ஆத்மார்த்தமாகவும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்று கின்றனர். கரோனா காலத்தில் அவர்கள் ஆற்றிய சேவையை எவரும் மறக்க முடியாது. மருத்துவ சிகிச்சையில் குறைபாடு எனக்கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். இந்த விவகாரத்தை முன்னிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவர் சங்கங்கள் அறிவித்திருந் ததை அடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது கிண்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதாக உறுதியளித்திருக்கிறோம். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE