கோவை: பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக உள்ளோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நான் முதல்வர் ஸ்டாலினை கொச்சைப்படுத்திப் பேசுவதாக, கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் எப்படியெல்லாம் பேசினார் என்று மக்களுக்குத் தெரியும். ஊர்ந்து சென்றார், பறந்து சென்றார், கரப்பான் பூச்சி என்றெல்லாம் என்னைக் குறிப்பிட்டார்.
அதிமுக யாரையும் தவறாக விமர்சனம் செய்வதில்லை. ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், எங்களை பற்றி தவறாகப்பேசினால், தக்க பதிலடி கொடுப்போம். அதிமுக ஆட்சியில் எந்ததிட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று தவறான தகவலை முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பணிகள்மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, சொந்தம் கொண்டாடி வருகிறது திமுக அரசு. மேலும், திமுக ஆட்சியில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தபோதிலும், எதுவுமே தொடங்கப்படவில்லை. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், திமுகவினர் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து பேச நான் முதல்வர் ஸ்டாலினை விவாதத்துக்கு அழைத்தேன். ஆனால், அதற்கு துணை முதல்வர் உதயநிதி பதில் கூறுகிறார். உதயநிதிக்கு பதில் சொல்ல எங்களிடம் முன்னாள் அமைச்சர்கள் நிறைய பேர் உள்ளனர். முதல்வருக்கான கேள்விக்கு முதல்வர்தான் பதில் கூற வேண்டும். தமிழகத்தில் 4 அதிகார மையங்கள் உள்ளன. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனை தடுக்கப்படவில்லை. காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை.
» தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைச் சுவடிகளை பார்வையிட்ட ஆளுநர்
» கரூர் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 147 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து கூற முடியும். ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் இணையலாம் என்று கூறியதை, பாஜகவுடன் மறைமுக கூட்டணி என்று விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். மக்களவைத் தேர்தலின்போதே தெளிவாக சொல்லி விட்டோம். சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பலமுறை தெரிவித்துவிட்டோம். பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.