கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக் குத்து: சென்னை கிண்டி கலைஞர் மருத்துவமனையில் மருத்துவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞரை பணியாளர்கள், பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த புது பெங்களத்தூரை சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ் 25 இளைஞர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை பார்த்துவிட்டு, தொற்றுகள் அதிகமாகியுள்ளதாகவும், மேலும் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தாய் வலியால் துடித்து அவதிப்பட்டு வருவதை பார்த்து வேதனை அடைந்த மகன் விக்னேஷ் புதன்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் கிண்டி கலைஞர் மருத்துவமனைக்கு வந்தார். புறநோயாளிகள் பிரிவில் ஓபி சீட்டு வாங்கி கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் பாலாஜியின் அறைக்கு சென்று, அறையின் கதவை மூடிவிட்டு, எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கேட்டு விக்னேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த விக்னேஷ், மறைத்து வைத்திருந்த வீட்டில் இருந்து எடுத்து வந்த காய்கறிகள் வெட்டும் கத்தியால் மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். கத்தி குத்தால் பலத்த காயமடைந்த மருத்துவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
» செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை - தொடர் சர்ச்சையில் கோத்தகிரி அரசு மருத்துவமனை
» ஆவடியில் பயிற்சியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்
மருத்துவமனையில் இருந்து பணியாளர்கள், பொதுமக்கள், அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து வந்த கிண்டி போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விக்னேஷை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்: சென்னை கிண்டி கலைஞர் மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவர் பாலாஜிக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தாலும், நன்றாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கூறும்போது, “மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபரின் தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களே தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றனர். அவரது தாயின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றிருக்கிறார்.
மருத்துவர் இதய நோயாளி. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இந்த பயங்கர தாக்குதலில் அவருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து துறை நிபுணர்களும் சேர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர் நலமுடன் இருக்கிறார்” என்றார்.
மருத்துவர்களின் போராட்டத்தால் பரபரப்பு: மருத்துவரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கிண்டி கலைஞர் மருத்துவமனையில் ஒன்றாக திரண்டு மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்தும், மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்ட அறிவிப்பும், பேச்சு வார்த்தையும்: “சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்,” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் அறிவித்துள்ளார்.
இதனிடையே, அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினருடன் ஈடுபடவுள்ளதாக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடந்தது.
முதல்வர் உறுதியும், எதிர்க்கட்சிகள் கண்டனமும்: “மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதேவேளையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து திமுக அரசை கடுமையாக கண்டித்துள்ளனர்.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் வியாழக்கிழமை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் - சீமான்: “கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும். அடுத்தவன் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது. எனவே கூட்டணி எனக்கு சரியாக வராது. தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தங்கம் விலை மேலும் சரிவு; பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்னையில் ஆரபணத் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், புதன்கிழமை பவுனுக்கு மேலும் ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.56,360-க்கு விற்பனையானது. இதனிடையே,
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதன்கிழமை வீழ்ச்சியில் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 984 புள்ளிகளும், நிஃப்டி 324 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டிருந்தன.
ஜார்க்கண்ட் முதல் கட்ட வாக்குப்பதிவு: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக புதன்கிழமை 43 தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
‘புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி: சொத்து உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல், சட்டவிதிகளை பின்பற்றாமல் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்று ‘புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘ஒரு நிர்வாகி ஒரு நீதிபதியைப் போல் செயல்பட்டு, சட்ட விதிகளைப் பின்பற்றாமல் ஒரு வீட்டை இடிக்க உத்தரவிட்டால், அது சட்டத்தின் விதியை மீறுவதாகும்’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் விதிமீறிய கட்டிடங்கள் இடிக்கப்படும் விவகாரம் தொடர்பான வழக்கில்தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, “ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவராகவோ அல்லது குற்றவாளியாகவோ இருப்பதால், சொத்துகளை இடிப்பதற்காக அது ஒரு காரணமாக இருக்க முடியாது. சட்ட விரோதமாக ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டால்கூட அது அரசியலமைப்பின் ‘நெறிமுறைகளுக்கு’ எதிரானது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.