சென்னை: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச்செயலருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்துறை), கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (வருவாய்), தலைமைச்செயலர் நா.முருகானந்தம், வேளாண்துறை செயலர் அபூர்வா, வேளாண் இயக்குனர் முருகேஷ் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.அருள்ராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 'தற்போது தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில், பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாளை நவ.15ம் தேதிவரை நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல விவசாயிகள் இதுவரை பயிர்க்காப்பீடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தொடர் விடுப்பு, பல மாவட்டங்களில் தொடர் மழை ஆகியவற்றால் காப்பீடு செய்ய முடியவில்லை. என, தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு பரிந்துரைத்து விவசாயிகள் நலனுக்காக பயிர்க் காப்பீட்டுக்கான கால வரையறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நவ.15ம் தேதியை நீட்டிக்கச்செய்ய வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.