கொடைக்கானலில் தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, மயக்கம்

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 70 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். இதேபோல், நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஏரிச்சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.

நேற்று (நவ.12) இரவு அந்த விடுதியில் மாணவர்களுக்கு அசைவ உணவுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை சாப்பிட்ட, சில நிமிடங்களில் 40 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று (நவ.13) காலையும் இரவு உணவருந்திய 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினர் சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் சுற்றுலாப் பயணிகளும் அச்சத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE