கனமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

By KU BUREAU

சென்னை: மழைக்கால பணிகளில் 22 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக இருக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பரவலாக மழைபெய்து வரும் நிலையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் அதிக கனமழை எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,194 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 524 ஜெட் ராடிங் இயந்திரங்கள், 329 நிவாரண மையங்கள், 120 உணவு தயாரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மாநகராட்சியில் 22 ஆயிரம் பேர் மழைக்கால பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்டோபரில் பெய்த மழை அனுபவத்தை கொண்டு, கண்காணிப்பு அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் கூடுதல் மோட்டார்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

அக்டோபரைவிட 21 சதவீதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளோம். மழைக்காலத்தில் மெட்ரோ பணிகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த அனைத்து விரைவான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் ச.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE