சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளாக மாற்ற பரிந்துரை: விரைவில் இயக்க முடிவு

By KU BUREAU

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 8-ல் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்ட மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதேநாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.

இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பண்டிகை நாள்கள் உள்பட முக்கிய நாள்களில் டிக்கெட் விரைவாக முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்துவிடுகிறது. எனவே, இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே வணிகப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளாக மாற்ற தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE