எதிர்க்கட்சியினர் வன்மத்துடன் வதந்தி பரப்புகின்றனர்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By KU BUREAU

மக்களின் தேவையறிந்து திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை பொறுக்கமுடியாமல் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வதந்திகளைப் பரப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: கோவையைத் தொடர்ந்து, நவ. 9, 10-ம் தேதிகளில் விருதுநகரில் பயணம் மேற்கொண்டேன். விருதுநகரில் பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்திருப்பதால், 9-ம் தேதி ஒரு தொழிற்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தேன். தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று, பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் வகையில், மாவட்ட நிர்வாக அளவிலேயே ஒரு நிதியம் உருவாக்கவும், அந்த நிதியத்துக்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கியும் அறிவித்தேன்.

ஆய்வுப் பணிகளை முடித்து உரிய ஆலோசனைகளை வழங்கியபிறகு, அன்னை சத்யா அரசு காப்பகத்தில் உள்ளவர்களைச் சந்திக்க, இனிப்புகள், பழங்களை வாங்கிச் சென்றேன். குழந்தைகளிடம் விடுதிக்காப்பாளர் என்னை காட்டி கேட்டபோது, “அப்பா…” என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்தேன்.

அடுத்து கட்சியினருடைய கலந்தாய்வுக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சளைக்காத உழைப்பு தேவை என்பதை எடுத்துரைத்தேன். நவ.10-ம் தேதி தோழமைக் கட்சி முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் சந்தித்து, அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தை அதிமுக 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டதையும், இந்த ஆட்சியில் 40 சதவீதம் பணிகள் நிறைவேறியுள்ளதையும் விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, விருதுநகரில் 40 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் விழாவில் பங்கேற்றேன். நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர்கூட விடுபடுதல் கூடாது என்ற அக்கறை இருப்பதால் மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது.

இதைப்பொறுக்க முடியாமல்தான் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வதந்திகளைப் பரப்புகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். திட்டங்கள், கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயரை வைப்பதா என பொங்குகிறார். தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் 80 ஆண்டு கால வாழ்வை அர்ப்பணித்தவர் கருணாநிதி. 5 முறை தமிழக முதல்வராக இருந்து நவீன தமிழகத்தை கட்டமைத்தவரை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டு நினைவாக மருத்துவமனை, நூலகம் உள்ளிட்டவற்றை அமைத்தோம்.

கருணாநிதி போலவே மக்கள் நலனுக்காக பாடுபட்ட தலைவர்களை போற்றவும் அரசு தவறியதில்லை. பல தலைவர்கள் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தை முன்பைவிட சிறப்பாக நடத்தி வருகிறோம். விருதுநகரில் அரசு காப்பகம் எம்ஜிஆரின் தாயார் அன்னை சத்யா பெயரில்தான் இயங்கி வருகிறது. இந்த அடிப்படை எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படி புரியாமல் போனதோ?

மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது. கோவை, விருதுநகரைத் தொடர்ந்து நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் களஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறேன். அங்கு தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை தொடங்க உள்ளதால், இரு மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

ஒவ்வொரு மாவட்ட சுற்றுப்பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதை பார்த்து சிலர் வயிறு எரிகிறார்கள். அவர்கள் பேசட்டும், நாம் சாதிப்போம், திமுக ஆட்சியின் வெற்றிச்சரித்திரம் தொடரட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE