அரசு ஊழியர்கள் விஷயத்தில் உண்மை நிலை உணராமல் அதிமுக மீது பாய்வதா? - திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

By KU BUREAU

அரசு ஊழியர்கள் விஷயத்தில் உண்மை நிலையை உணராமல், அதிமுக மீது திமுக பாய்வது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கபட வேடம் புனைவதில் பிஎச்டி பட்டம் பெற்ற திமுகவினர், அதிமுகமீது பாய்வது கண்டிக்கத்தக்கது. கடந்த 42 மாத திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் அவதியுறும் நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாததால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால்தான் அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வரும் என்றால், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிக்கத் தயார் என அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாக செய்திகள் வந்தன.

இதுகுறித்து, கடந்த 10-ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, ’அனைவரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன’ என்று பதில் அளித்தேன். எனது இந்த கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை, யார் பெயரும், கையெழுத்தும் இல்லாமல் முக்கிய குடும்பத்தின் மருமகன் தலைமையில் இயங்கும் நிறுவனம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

மனம் போன போக்கில் உண்மைகளை மறைத்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். எந்தச் சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. கடந்த 2021 பொதுத் தேர்தலின்போது, புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். 20ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சம வேலை - சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தவிர, 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

அதிமுக ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் ரூ. 4 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டதுடன், சில சிகிச்சைகளுக்கான உச்சவரம்பு ரூ. 7.50 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. கரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் அறிவித்ததும், 2017ல் 7 வது ஊதியக் குழு அமைத்து, அக்.1 முதல் ஊதிய உயர்வை வழங்கியது. தொடர்ந்து அகவிலைப்படி உயர்வும், மத்திய அரசு உயர்த்தும்போதெல்லாம் நிலுவையுடன் வழங்கப்பட்டது.

ஆனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுகவோ, பலமுறை அகவிலைப்படி உயர்வை 6 மாத நிலுவை இல்லாமல் வழங்கியது. அனைத்துக்கும், எங்கள் ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்த முடியும். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்த முற்பட்டால், காவல் துறையை ஏவிவிட்டு கைது செய்து, அவர்களது குரல்வளையை இந்த அரசு எப்படி நெரிக்கிறது என்பதை அனைவரும் நன்கு அறிவர். தெரிந்தோ, தெரியாமலோ கடந்த 42 மாத திமுக ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். 18 ஆண்டுகள் கருணாநிதி செய்ததுதான் அறிக்கையில் அதிகமாக உள்ளதே தவிர, ஸ்டாலின் அரசு செய்தது எதுவும் இல்லை.

பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக்கொள்வார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த திமுக விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. இனியும் உண்மை நிலைகளை உணராமல், எங்கள் மீது பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE