கனமழை எச்சரிக்கை முதல் கஸ்தூரிக்கு எதிரான அரசின் வாதம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு?: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் 16-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

புதன்கிழமை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திங்கள்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 சென்ட மீட்டர் மழை பதிவானது.

‘காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு இல்லை’: “தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு அருகே நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. கடற்கரைப் பகுதியில்தான் அது நிலவுகிறது. இது மெதுவாகவே கடந்து செல்லும்.

வானிலை என்பது தொடர் மாற்றத்துக்குரியது. கடந்த 7, 8 மற்றும் 9-ம் தேதி வரை, வங்கக் கடலின் வடபகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையில், வடபகுதியில் மேற்கு திசைக்காற்றும், தென் பகுதியில் கிழக்கு திசை காற்றும் சென்றிருக்கிறது. அதன்பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விவரித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது: எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீனவர்கள், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடித்து வரும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைக்கு மீனவர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து இன்று பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை தமிழக மீனவர்களின் 66 படகுகளை சிறைப்பிடித்து, 497 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூரில் மீண்டும் கலவரம் - ஊரடங்கு அமல்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு படையினர், பொதுமக்களை குறிவைத்து குகி பழங்குடியினத்தை சேர்ந்த சில தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்திவருகின்றன.

ஜிரிபாம் பகுதி காவல் நிலையத்தை குறிவைத்து குகி பழங்குடியின தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக் கொண்ட போலீஸார், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சிஆர்பிஎஃப் வீரர்களும் விரைந்து வந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 குகி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில் சிஆர்பிஎஃப் 2 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜிரிபாம் மாவட்டம் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தங்கம் விலை கடும் வீழ்ச்சி: தங்கம் விலை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சில்லரை பணவீக்கம் 6.21% ஆக அதிகரிப்பு: இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, உணவு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

பகிரங்க மன்னிப்பு கோரிய நியூசிலாந்து பிரதமர்!: சிறுவர்களுக்கான அரசு பராமரிப்பு இல்லங்கள், மனநல மருத்துவமனைகள் உள்ளிட்ட காப்பகங்களில் கடந்த 70 ஆண்டுகளாக சுமார் 2 லட்சம் பேருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்காக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமான, வரலாற்றுபூர்வமான மன்னிப்பு கோரினார். பிரதமர் லக்சன் மன்னிப்பு வேண்டி பேசியதைக் கேட்ட பாதிக்கப்பட்டவர்கள் தேம்பி தேம்பி அழுது மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர்.

கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு: சென்னையில் பிராமணர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நடத்திய கூட்டத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்த பேச்சு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.

பொது இடத்தில் ஒரு சமூகத்தை அவதூறாகப் பேசிவிட்டு வருத்தம் தெரிவிப்பதால், அந்த சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க முடியாது. மனுதாரர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாது பிரிவுகளாகும். மனுதாரர் மீது 6 வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார்.

மேலும், “தமிழகத்துக்கும் கர்நாடகம், கேரளம் இடையே சில பிரச்சினைகள் உள்ளது. தமிழகத்தின் நட்பு மாநிலங்களாக இருப்பது ஆந்திரா மற்றும் தெலங்கானா. திருப்பதி செல்லும் பக்தர்கள் 40 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவ்விரு மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு கஸ்தூரி இவ்வாறு பேசியுள்ளார்.

சென்னைக் கூட்டத்தில் ஒரே கொள்கை உடைய பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொழி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதை அனுமதித்தால் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்படும். மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவரைப்போல் மற்றவர்களும் பேசத் தொடங்குவார்கள். எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார். இதையடுத்து, கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தீர்ப்புக்காக நவம்பர் 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE