திமுகவினர் மீது அவதூறு பரப்புவதாக பழனிச்சாமிக்கு எதிராக டிஎஸ்பியிடம் புகார்!

By என்.சன்னாசி

மதுரை: அதிமுக - அமமுக மோதல் சம்பவத்தை இணைத்து, திமுகவினர் மீது அவதூறு பரப்பும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உசிலம்பட்டி டிஎஸ்பியிடம் திமுக புகார் அளித்துள்ளது.

மதுரை தெற்கு மாவட்டம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளமகிழன் உள்ளிட்ட அக்ட்சியினர் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: "மதுரை உசிலம்பட்ட சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சேடபட்டி அருகிலுள்ள மங்கல்ரேவு- அத்திபட்டி விலக்கில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனை கீழ்த்தரமாக பேசியதாக அமமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தரப்பினருக்கும், அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்பி. உதயகுமார் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக இரு தரப்பிலும் காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் திமுகவினரின் தூண்டுதலில் அத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக பதிவிட்டுள்ளார். திமுகவினர் மீது பொய், அவதூறு பரப்பும் அதிமுக பொதுச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE