பழங்குடி இருளர் மக்கள் கையில் எலியை பிடித்துக்கொண்டு போராட்டம் - இலவச மனைப் பட்டா வழங்க வலியுறுத்தல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி கோர்க்காடு பகுதியில் ஏரிக்கரை ஓரமாக 26 குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 70 ஆண்டுகளாக வசித்து வரும் இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்நிலையில், இன்று புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில் மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கையில் எலியை பிடித்துக்கொண்டு நூதன போராட்டம் கோர்காடு பகுதியில் நடைபெற்றது. பழங்குடியினர் விடுதலை இயக்கம் மாநிலச் செயலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். ரவி, அழகப்பன், சித்ரா, வள்ளி, பிரகாஷ், கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வசித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் பாவாணன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன், திராவிடர் கழகம் இளங்கோவன், லோக ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழங்குடியின மக்கள் தங்கள் கையில் எலிகளை பிடித்துக்கொண்டு நூதன முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE