“பாலாற்றை காக்க தவறினால் வேலூர், சென்னை வளர்ச்சி பெறாது” - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

By ந. சரவணன்

திருப்பத்தூர்: பாலாற்றை பாதுகாக்க தமிழக அரசு தவறினால் வேலூர், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வளர்ச்சி பெறாது என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை கடந்து தமிழகத்தில் 220 கி.மீ., பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. பாலாறு மூலம் வட மாவட்டங்கள் பாசனத்தில் செழிப்படைந்து வந்தது. பாலாற்றில் கடந்த 1874ம் ஆண்டு, 1884ம் ஆண்டு, 1898ம் ஆண்டில் மழை வெள்ளம் ஏற்பட்டாலும், வரலாற்றில் மிக துயரமான சம்பவம் 1903ம் ஆண்டு ஏற்பட்டது.

1903ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாணியம்பாடி நகரின் மக்கள் தொகை 15 ஆயிரமாக கணக்கிடப்பட்டிருந்தது. அந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி, விடாமல் பெய்த பெருமழையால் பாலாற்று நீர்ப்பிடிப்புப் பகுதியான சிக்பெல்லாபூர், கோலார் ஆகிய மாவட்டத்தில் கொட்டித் தீர்த்தது கனமழை. அப்போது, விடாமல் பெய்த கனமழையால் பேத்தமங்கலா ஏரியின் கரைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்ததால் கட்டுப்படுத்த முடியாத வேகத்துடன் தமிழகத்துக்குள் நுழைந்து பெரு வெள்ளம் கொடையாஞ்சி கிராமம் அருகே வாணியம்பாடி நகரை சுற்றிவளைத்தது.

அப்போது, அதிகாலை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அப்படியே மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரே இரவில் வீடுகளையும், உடமைகளையும், உறவுகளையும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த வாணியம்பாடி மக்கள் பெரு வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

1903ம் ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த பிரபல ஆங்கில நாளிதழ்கள் முதல் பக்கத்தில் இந்த துயரச் செய்தியை அப்போது வெளியிட்டது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்றும் வாணியம்பாடி நகரில் பார்க்க முடிகிறது. மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு வாணியம்பாடி சந்தை மேட்டில் ஆங்கிலேயர்கள் வைத்த நினைவுத்தூணுக்கு ஆண்டு தோறும் நவம்பர் 12ம் தேதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தற்போது வரை நடந்து வருகிறது. அந்த வகையில், 121ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலத்தும் நிகழ்ச்சி வாணியம்பாடியில் இன்று (செவ்வாய்கிழமை) நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் பாலாறு பெருவெள்ளத்தில் உயிரிநீத்த பொதுமக்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துதல், பாலாறு உரிமை போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துதல் மற்றும் அது தொடர்பான கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி வாணியம்பாடியில் இன்று நடைபெற்றது. வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. இந்த பேரணியில் விவசாய சங்க பிரநிதிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடி சி.எல்.சாலை வழியாக வாரச் சந்தையை அடைந்த பேரணி அங்குள்ள நினைவு தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வாணியம்பாடி நகராட்சி மன்ற தலைவர் உமாபாய், வட்டாட்சியர் உமா ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு பாலாறு பெருவெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, வாணியம்பாடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேர்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வடிவேல் சுப்பிரமணியன் வரவேற்றார். பாலாற்று நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன் தலைமை வகித்தார். வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் செயலாளர் நா.பிரகாசம், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி இரா.முல்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது, "காற்று, நீர் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்று பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்பது இந்த நிகழ்ச்சி மூலம் தெரிகிறது. வாணியம்பாடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வளர்ந்த நாடுகளில் காற்று மாசடைந்துவிட்டது. தமிழகத்தில் நீர்நிலைகளில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது.

5 அடிக்கு அனுமதி பெற்றுக்கொண்டு 50 அடி வரை மணல் கொள்ளை நடக்கிறது. இந்தியாவிலேயே ஒரே சீதோஷண நிலை உள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். இங்கு நமக்கு 2 பருவமழை கைகொடுக்கிறது. பெரிய நதிகள் நம்மாநிலத்தில் ஓடுகிறது. இந்தியாவுக்கு வழிகாட்டி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 80 சதவீதம் அரிசி உற்பத்தி தமிழ்நாட்டில் இருந்து தான் இந்தியாவுக்கு கிடைக்கிறது.

இத்தகைய இயற்கை வளம் நிறைந்த தமிழ்நாட்டின் இன்றைய நிலை இயற்கை வளம் கொள்ளைப்போவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்க வேண்டியது தமிழக அரசின் கையில் தான் உள்ளது. பாலாறு தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட கி.மீ., தொலைவுக்கு ஓடுகிறது. இதன் மூலம் 1.25 லட்சம் ஏக்கர் விவசாயம் பாசனம் செய்யப்படுகிறது. 2 கோடி மக்களின் குடிநீர் தாகத்தை பாலாறு தீர்க்கிறது.

பாலாறு மட்டும் அல்ல காவிரி, முல்லை பெரியாறு, தென்பெண்ணை, தாமிரிபரணி போன்ற நதிகளில் நிலவும் பிரச்சினைகளை தமிழ்நாடு அரசு முன்நின்று தீர்க்க வேண்டும். தமிழக பாலாற்றுப் பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டும். பாலாற்றை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு தவறினால் வேலூர், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வளர்ச்சி பெறாது. எனவே, பாலாற்றை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்" என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்க நிர்வாகிகள் கிரிசமுத்திரம் ஹரிகிருஷ்ணன், பொம்மிகுப்பம் ராதாகிருஷ்ணன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சேது ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பார்த்தீபன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE