சென்னை: கிழிந்த 20 ரூபாய் நோட்டை மாற்றி தராத ஆத்திரத்தில் மதுபான பார் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் டாஸ்மாக் மதுபான கடையும் அதையொட்டியே பாரும் உள்ளது. நேற்று மாலை இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு பாரிலேயே தூங்கி உள்ளார். அவரை எழுப்பி வெளியே போகச் சொன்னபோது, தான் சாப்பிட்ட தின்பண்டங்களுக்கு 240 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை வாங்கிக் கொண்டு சென்றவர் மீண்டும் சிறிது நேரத்தில் பாருக்கு வந்துள்ளார்.
அப்போது பாரில் பாக்கி சில்லறையாகக் கொடுத்த ரூபாயில் 20 ரூபாய் பணம் கிழிந்துள்ளது என்றும் அதை மாற்றித் தருமாறும் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பாரில் இருந்தவர்கள் அந்த 20 ரூபாய் பணம் நாங்கள் கொடுக்கவில்லை என்று கூறியதாகவும், இதன் எதிரொலியாக இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அப்போது பாரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தகராறு செய்த நபரை வெளியே இழுத்து வந்து அனுப்பி வைத்தனர்.
பிறகு இரவு 7.40 மணியளவில் அங்கு வந்த அதே நபர், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து பாருக்குள் எரிந்து விட்டு ஓடியுள்ளார். அந்த பாட்டில் மதுபானம் அருந்தி கொண்டிருந்தவர்களின் அருகில் விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக பாரில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
» பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் சிக்கிய மகன்: சிறுவன் என போலி சான்றிதழ் தயாரித்த தந்தை கைது
» மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கொடூரம்: நகை வியாபாரி தற்கொலை முயற்சி
இது தொடர்பாக அரும்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில், தப்பி ஓடிய அந்த இளைஞரை கைது செய்தனர். விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியது திருமுல்லைவாயல் செந்தில் நகரை சேர்ந்த விஷ்ணு (30) என்பதும், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் அவர் வீடு திரும்பி உள்ளார் என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் மீண்டும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவர், அவரது இருசக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் கேனில் வைத்திருந்த பெட்ரோலை பாட்டிலில் ஊற்றி, தீ பற்ற வைத்து பாரில் வீசியுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.