கரூர்: மாநகராட்சி பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: 8 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை வாங்குவதாகச் சொல்லி கரூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி தூய்மை பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக 400 தூய்மைப் பணியாளர்கள் 83 ஓட்டுநர்கள், 20 மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 40-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஒரு சில வாகன ஓட்டிகள் பணிக்குச் செல்லாமல் இன்று பணிகளை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு சில வார்டுகளில் குப்பை அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகேசன் பேசுகையில்,"தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.692 என்ற நிலையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ரூ.400 மட்டுமே வழங்கி வருகிறது. மேலும், இவர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ பிடிப்பதில்லை. காலை 6 மணிக்கு வரும் பணியாளர்களுக்கு மதியம் 2 மணியோடு பணி நேரம் முடிவடையும். ஆனால், இப்போது 6 மணி வரை பணியை நீட்டித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். ஆனால், அது தருவதில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் 10 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுகுறித்து ஆணையருக்கு 10 புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. நிரந்த தொழிலாளர்களுக்கு இதுவரை தீபாவளி முன்பணம் வழங்கப்படவில்லை. மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது.

இது குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் மாநராட்சி நிர்வாகத்திற்கும் தெரியும். இவர்களுக்கு தெரியாமல் ஒரு நபருக்கு ரூ.692 சம்பளத்தை ஒப்பந்த நிறுவனம் தர முடியாது. ஒப்பந்ததாரர்கள் மமதையுடன் நடந்து கொள்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களிடம் மேயர் பேச்சுவார்த்தை நடத்தி 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்தார். அதனால் தூய்மைப் பணியாளர்கள் 2 மணி நேரமாக நடத்திய காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளனர்” என்று முருகேசன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE