சென்னை: அதிமுகவின் பல்வேறு நிலைகளில் உள்ள கட்டமைப்புகளின் பணிகளை மேம்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச்சீட்டுகள் முழுமையாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும் களஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மாவட்ட வாரியாக சென்று ஆய்வு செய்து விவரங்களை சேகரிக்க வேண்டும். அவற்றை தொகுத்து அறிக்கையாக டிச.7-ம் தேதிக்குள் வழங்க பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவில் முன்னாள் அமைச்சர்களான கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி தவிர்த்து மற்ற அனைவரும் பங்கேற்றனர்.
இதில் பழனிசாமி பேசும்போது, ‘‘களஆய்வின்போது, மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள், பேரவை தேர்தலில் தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் அதிருப்திக்கு உள்ளான நிர்வாகிகள், அதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்தஅறிக்கை உண்மை தன்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் இருக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடு திருப்திஅளிக்கவில்லை என்றால் அதனை அறிக்கையில் குறிப்பிட வேண்டும்’’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
» நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம்
» பாஜகவுடன் அதிமுக எப்போதும் கூட்டணி வைக்காது: டி.ஜெயக்குமார் திட்டவட்டம்