மதுரை: மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் சேடபட்டி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டம் முடிந்து இரவில் கட்சியினர் வாகனங்களில் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
மங்கல்ரேவு ஆர்ச் அருகே இரவு 9 மணியளவில் அதிமுகவினர் சென்ற வாகனங்களை அமமுகவினர் வழிமறித்து, ‘டி டி.வி.தினகரன் குறித்து கூட்டத்தில் ஏன் பேசினீர்கள்? இனிமேல் பேசக்கூடாது’ எனக் கூறி, எச்சரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது.
அதிமுக இளைஞர் பாசறைதுணைச் செயலாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட கட்சியினரை அமமுகவினர் கடுமையாகத் தாக்கிஉள்ளனர். தினேஷ்குமார் உட்பட3 பேர் காயமடைந்தனர். அவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். சிகிச்சை பெற்றுவந்த கட்சியினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக தினேஷ்குமார், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக தினேஷ்குமார், சேடபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அமமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனி சாமி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, அமமுகவைச் சேர்ந்த பழனிசாமி (52), குபேந்திரன் (40), பாண்டி (35) ஆகியோரை கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான நிர்வாகிகள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்தார்.
பழனிசாமி கண்டனம்: இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘மங்கல்ரேவு அத்திப்பட்டு விலக்குஅருகே அரசியல் காழ்ப்புணர்ச்சி யுடன், சில சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிமுக எப்போதும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். இந்த வன்முறை நிகழ்வில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.