சென்னை: மனித வள மேம்பாட்டுத்துறை செயலராக சமயமூர்த்தி, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக அதுல் ஆனந்த் என 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாஹூவுக்கு பதில், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறையின் செயலராக இருந்த அர்ச்சனா பட்நாயக், புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, சில ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமை செயலர் நா.முருகானந்தம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சுற்றுலாத் துறை ஆணையராக இருந்த சி.சமயமூர்த்தி, மனித வள மேம்பாட்டுத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய சுகாதார திட்ட இயக்குநராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் செயல்படுவார்.
» அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாஹூ, ஏற்கெனவே கூடுதலாக கவனித்து வந்த கால்நடை பராமரிப்பு,பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை முதல்வரின் துணை செயலர்: சமக்ர சிக்சா மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி, துணை முதல்வரின் துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சமக்ர சிக்சா மாநில திட்ட இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ஏ.அருண் தம்புராஜ், தேசிய சுகாதார இயக்க இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.