திருப்பூர் கல்வி விடுதிகளில் “நாளை” திடீர் ஆய்வு - முன்கூட்டியே வெளியான தகவலால் சலசலப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் நாளை திடீர் ஆய்வு மேற்கொள்வதாக, முன்கூட்டியே வெளியான தகவலால் அரசின் நோக்கம் முழுமை பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மேற்கண்ட துறையின் அரசு முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். தங்கும் விடுதியில் தங்கும் வசதிகள் மட்டுமின்றி, மாணவ, மாணவியர் தங்களுடையை கல்வியைத் தடையின்றி தொடரும் பொருட்டும் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் பற்றாக்குறை மற்றும் புகார்கள் தொடர்பாகவும் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, "மாணவர்களின் வருகை, பணியாளர் எண்ணிக்கை, மாணவர்கள் எண்ணிக்கை, கல்வித்திறன், உணவு பட்டியலின்படி உணவின் தரம் மற்றும் உரிய அளவு, குடிநீர், சுகாதாரம், தொலைக்காட்சி, நூலகம், தீயணைப்பான், நீர் சுத்திகரிப்பன் உள்ளிட்ட வசதிகள் குறித்தும், சமையல் அறை உபகரணங்கள், கட்டிட பராமரிப்பு உட்பட விடுதிகளின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் விடுதிகள் உரிய தரத்தில் உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, காங்கயம், வெள்ளகோவில், குண்டம், எலுகம்வலசு, சின்னக்காம்பட்டி, திருப்பூர், தாராபுரம், பல்லடம், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆண், பெண் விடுதிகள் என மொத்தம் 18 கல்வி விடுதிகளிலும், நாளை (நவ.12) ஒவ்வொரு துறையின் மாவட்ட அதிகாரிகளை கொண்டு திடீர் ஆய்வு மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த தகவல் முன்கூட்டியே வெளியானதால், விடுதிகளில் உரிய முன்னேற்பாடுகள் தற்காலிகமாக செய்தி வைத்திருப்பார்கள்.

இதனால் அரசின் நோக்கம் முழுமை பெறாது. இது போன்ற விஷயங்களில் ’திடீர்’ விசிட்டுகளை மிகவும் ரகசியம் காக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, விடுதிகளின் உண்மை நிலை தெரியவரும். ஆய்வும் முழுமையடைந்து மாணவ, மாணவியரும் முழு பயன்பெறுவார்கள். இல்லையென்றால் இது வெறும் கண்துடைப்பாகவே மாறும்" என்று மாவட்ட மக்கள் கூறினர். திருப்பூர் மாவட்ட அலுவலர் ஒருவர் கூறும்போது,"விடுதிகளில் 'திடீர் விசிட்' தகவல் வெளியானது தொடர்பாக விசாரிக்கிறேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE