மதுரை: மதுரையில் இன்று தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழக சிறப்பாசிரியர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து தமிழக சிறப்பாசிரியர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்,"தமிழகம் முழுவதும் 2011-12ம் கல்வியாண்டு முதல் அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 363 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முறையான நியமனம் பெற்ற குறைந்த ஊதியமான ரூ.12,500-க்கு அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவர்களின் பன்முகத்திறன்களை மேம்படுத்தி வருகின்றோம். கடந்த 13 ஆண்டாக பணி நிரந்தரம் செய்யப்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
» சுயேச்சை எம்எல்ஏவுக்கு ரவுடி மிரட்டல்: புதுவை வணிகர்கள் ஆளுநரிடம் புகார்
» வேளாண் இயந்திரங்களுக்கு மானிய விலையில் டீசல்: விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தார். மூன்று ஆண்டாகியும் இதுவரை நிறைவேற்றவில்லை. இருந்தாலும் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் உள்ளோம். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம்” என்றார்.