பாம்பன் புதிய பாலத்தில் நவ.14-ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை நவம்பர் 14 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி ஆய்வு செய்ய உள்ளார்.

1914ம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் நூறு ஆண்டுகளை தாண்டி விட்டதாலும், பாலத்தில் ஏற்பட்ட விரிசல் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளினால், பழைய ரயில் பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியது.

பிரதமர் நரேந்திர மோடியால் 01.03.2019ல் காணொலி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.535 கோடி மதிப்பில், 11.08.2019ல் பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காகப் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின.

ரயில்வே நிர்வாகம் 31.09.2021க்குள் புதிய ரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றம் மற்றும் கரோனா பரவலால் நிர்ணயிக்கப்பட்ட செப்டம்பர் 2021-குள் பணிகளை முடிக்க முடியவில்லை.

புதிய ரயில் பாலம் 2078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டது 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது.

பாம்பன் புதிய ரயில் பாலம் மற்றும் பழைய ரயில் பாலம், சாலை பாலம்.

புதிய பாம்பன் ரயில் பாலத்தில் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து தூக்குப் பாலம் இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்குப் பாலம் ஆகும். இந்த செங்குத்து தூக்குப் பாலத்திற்கு விமானத் தொழில் நுட்பத்திற்கு பயன்படக்கூடிய அலுமினிய உலோகக் கலவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 100 டன்கள் ஆகும். ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கக்கூடியது. இந்த லிஃட் 3 நிமிடத்திற்குள் பாலத்தை திறந்து இரண்டு நிமிடத்திற்குள் பாலத்தை மூடக் கூடியது.

இந்த செங்குத்து தூக்குப் பாலத்தின் உயரம் 27 மீட்டர், நீளம் 77 மீட்டர் ஆகும். செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகிலேயே இரண்டு மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.

புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத்து தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள் முடிந்து, ரயில்கள் சோதனை ஓட்டம், செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் நவம்பர் 14 ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்கிறார். ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்கு பிறகு, பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தேதியும், விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவலும் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE