திருச்சி: திமுக ஆட்சியை வீழ்த்த, அதிமுக தலைமையை ஏற்கக்கூடிய கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சியில் என்னைப்பற்றி சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நான் ஆட்சியில் இருந்தபோது எதுவுமே செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2011 முதல் 2021 வரை மிகச் சிறந்தஆட்சியை அதிமுக தந்துள்ளது. ஒரேஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு கலை, அறிவியல் கல்லூரிகளைக் கொண்டுவந்தோம். ஆனால், சேலம்மாவட்டம் தலைவாசல் பகுதியில் அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடைப் பூங்காவை திறக்க இதுவரை முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் விவசாயிகளுக்கு போதுமான உரம் கிடைக்காத சூழல் உள்ளது. முதல்வர் ஸ்டாலின், திறனற்ற ஆட்சியை நடத்திவருகிறார்.
முதல்வரின் கவலை... கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை அளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றில் 10 சதவீதத்தைக்கூட நிறைவேற்றவில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்திய முதல் மாநிலம் தமிழகம்தான். அதை செய்தது அதிமுக அரசு. பிரதமரே இதைப் பாராட்டினார். முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் குறித்து கவலை கிடையாது. அவரது குடும்ப உறுப்பினர்களின் நலன் குறித்துதான் கவலைப்படுகிறார்.
» பரமத்திவேலூர் அருகே காவிரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
» ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை செய்தியாளர் காலமானார்
திமுக ஆட்சியை கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், அவர்களது கூட்டணியில் விரிசல் வந்து விட்டதாகத்தான் மக்கள் கருதுவார்கள். திமுக கூட்டணி உறுதியாக உள்ளது என்று மீண்டும் மீண்டும் கூறுவதே, கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டதை வெளிப்படுத்துகிறது.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். திமுக ஆட்சியை வீழ்த்த, அதிமுக தலைமையை ஏற்கக்கூடிய, ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுவோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
முன்னதாக, சேலத்தில் இருந்து கார் மூலம் திருச்சி வந்த பழனிசாமி, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.