வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக 3,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

By என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: பூர்வீக பாசன பகுதியான ராமநாதபுரம் மாவட்டதுக்காக வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடிநீர் இன்று திறக்கப்பட்டது. ஆகவே 5 மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வைகைஅணையின் பூர்வீக பாசன 3-ம் பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம், 2-ம் பகுதியாக சிவகங்கை, முதல் பகுதியாக மதுரை மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக பூர்வீக பாசன 3-ம் பகுதிக்கு அணையில் இருந்து இன்று (நவ.10) தண்ணீர் திறக்கப்பட்டது.

பரமக்குடி செயற்பொறியாளர் அன்புச்செல்வம், உதவி செயற்பொறியாளர் சந்திரமோகன், வைகைஅணை உதவி செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடும் வகையில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. பிரதான 7 மதகுகள் வழியே விநாடிக்கு 3ஆயிரம் கன அடி வீதம் நீர் சீறிப் பாய்ந்து வெளியேறியது.

இருகரைகளைத் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றதால் அணை முன்பு உள்ள பூங்கா தரைப்பாலம் மூழ்கியது. ஆகவே இதன் இரு நுழைவாயில்களும் அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. வரும் 18-ம் தேதி வரை 9நாட்களுக்கு மொத்தம் 1,830 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

பின்பு நீர் நிறுத்தப்பட்டு 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 10நாட்களுக்கு பூர்வீக பாசன முதல்பகுதிக்கு 418மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும். பின்பு நீர் நிறுத்தப்பட்டு டிச.1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 8 நாட்களுக்கு 752மில்லியன் கனஅடிநீர் பூர்வீக பாசன 2-ம்பகுதிக்கு திறக்கப்படும்.

இதன்படி 27 நாட்களில் மொத்தம் ஒருலட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பாசன பகுதிகளுக்காக 3ஆயிரம் மில்லியன் கன அடிநீர் திறக்கப்பட உள்ளது. வைகைஅணையின் நீர்மட்டம் தற்போது 65 அடியாகவும் (மொத்த உயரம் 71), நீர்வரத்து விநாடிக்கு 1,309 கனஅடியாகவும், குடிநீர் திட்டங்களுக்கும் சேர்த்து நீர்வெளியேற்றம் 3 ஆயிரத்து 69 கனஅடியாகவும் உள்ளது.

இது குறித்து நீர்வளத்துறையினர் கூறுகையில், 3ஆயிரம் கனஅடிநீரை ஒரேமுறையில் திறக்காமல் கரையோர பகுதி மக்களின் பாதுகாப்புக்காக மூன்று முறையாக பிரித்து வெளியேற்றப்பட்டது. இதன்படி 500, 1500,3000ஆயிரம் என்று படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது. கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்டத்தைச் சேர்ந்த கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE