“திமுக மிகப் பெரிய தோல்வி அடையும்; 2026-ல் அதிமுக ஆட்சி!” - எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை  

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: “திமுக மிகப் பெரிய தோல்வி அடையும்; 2026-ல் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக கரூர் சட்டப்பேரவைத் தொகுதி கரூர் கிழக்கு, மேற்கு, தாந்தோணி மேற்கு ஒன்றிய கட்சி வளர்ச்சிப் பணிகள், மக்கள் நல பணிகள் குறித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கரூர் தனியார் அரங்கத்தில் இன்று (நவ.10) நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியது: “இந்த இயக்கம் எத்தனையோ பேரை உருவாக்கி இருக்கிறது. எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம். முன்னாள் முதல்வர் பழனிசாமி 2 கோடி உறுப்பினர்களாக உயர்த்தியுள்ளார்.

31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து அதிகளவு திட்டங்களை வழங்கி இருக்கிறோம். உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம். திமுக அனைத்து உரிமைகளையும் விட்டுக்கொடுத்தது. கச்சத்தீவு, காவிரி உரிமை, நீட் தேர்வு என அனைத்து உரிமைகளையும் பறிக்கொடுத்தது. தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை.

அதிமுகவில் இருப்பதே பெருமை. அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. 2021 தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் 1.5 சதவீத வாக்கு வித்தியாசம் மட்டுமே. 4 ஆண்டுகளுக்கு மேல் அற்புதமான ஆ ட்சியை வழங்கியவர் பழனிசாமி. ஏராளமான திட்டங்களை வழங்கினார். கேட்ட திட்டங்களை வழங்கியவர். எளிமையான முதல்வர். எளிதில் யாரும் சந்திக்கக்கூடியவர். விவசாய குடும்பத்தை செய்தவர்.

இந்த ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். விளம்பரத்தில் தான் இந்த ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. எந்த திட்டங்களையும் அறிவிக்காவிட்டால் கூட பரவாயில்லை. சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஏற்றி விட்டனர். இந்த ஆட்சியில் ஏழை, நடுத்தர மக்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஒவ்வொரு முறை தோல்விக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியையும், திமுக வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். 2026ம் ஆண்டில் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்றார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது: ''கள்ள ஓட்டு போடுவதில் திமுகவினர் கில்லாடி எனவே வாக்குச்சாவடி முகவர்கள் கவனமாக இருக்கவேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் வெற்றி பெற வைக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடு பணியாற்றவேண்டும். உணர்வோடு வேலை செய்யவேண்டும்.

கட்சிக்கு இளைஞர்களை கொண்டு வரவேண்டும். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. திமுக கூட்டணி கண்டிப்பாக முறியும், உடையும். கூட்டணி மாறி, ஆட்சி மாறிய வரலாறு தமிழகத்தில் உள்ளது. திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. இன்னும் 17, 18 அமாவாசை தான் அதன் பிறகு அதிமுக ஆட்சி தான்'' என்றார்.

முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.திருவிக, தங்கவேல், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE