பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு: தமிழறிஞர்கள் அஞ்சலி 

By என்.சன்னாசி

மதுரை: பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் இன்று காலமானார். அவரது இல்லத்தில் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மதுரை டிவிஎஸ் நகர், சத்யாசாய் நகர் 4வது குறுக்குத்தெரு பகுதியில் வசித்தவர் பிரபல எழுத்தாளர், ஆன்மிக சொற்பொழிவாளர் இந்திரா சௌந்தர்ராஜன். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை வீட்டில் இருந்தபோது, குளியலறையில் வழுக்கி விழுந்த நிலையில், திடீரென மயங்கியதில் அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அவரது உடல் அவரது இல்லத்தில் எழுத்தாளர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்கென வைக்கப்பட்டது. தமிழறிஞர் சாலமன் பாப்பை உள்ளிட்ட எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த இந்திரா சவுந்தர்ராஜன் சிறுகதை, நாவல்கள் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதிய இவர், புராணங்கள், இதிகாசங்களை கலந்து கதைகளில் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார். இவரது கதைகள் பெரும்பாலும், தெய்வீக தலையீடு மறுபிறவி பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கி இருக்கும். 700 சிறுகதைகள், 340 நாவல்கள், 105 தொடர்களை எழுதியுள்ளார்.

சிருங்காரம், ஆனந்தபுரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு போன்ற புகழ் பெற்ற கதைகளையும் எழுதி இருக்கிறார். இவரது படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு அவரது குடும்பத்தினர்கள் மட்டுமின்றி தமிழக எழுத்தாளர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE