9 ஆண்டாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருது: உடனே வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்ஸின் எக்ஸ் வலைதளப்பதிவு: செம்மொழிக்கு சிறந்த முறையில் சேவையாற்றியவர்களுக்காக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ‘தொல்காப்பியர் விருது’ உள்ளிட்ட குடியரசுத் தலைவர் விருதுகள் கடந்த9 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகமும், தமிழ் வளர்ச்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டையும் ஆகும்.

கடந்த 2005-06-ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுக்கு 8 பேர் வீதம் கடந்த 20 ஆண்டுகளில் மொத்தம் 160 பேருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 66 பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மொழிசார்ந்த விருதுகள் அறிவிக்கப்படுவதன் நோக்கமே, அந்த மொழி குறித்த ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.பிறமொழியின் சிறந்த படைப்புகள்சம்பந்தப்பட்ட மொழிக்கு மாற்றம்செய்யப்படுவது ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுதான்.

ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக எந்த விருதும் வழங்கப்படாத நிலையில், தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் படைப்பு உருவாக்கத்திலும் ஈடுபடும் அறிஞர்களின் எண்ணிக்கை குறையும். அதற்கு அரசேகாரணமாக இருக்கக் கூடாது.

எனவே, கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகியவற்றை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு மத்தியபல்கலைக்கழகத்துக்கு இணையான தகுதி வழங்கி, அதன்மூலம் மொழி ஆராய்ச்சிகளை அதிகரிக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE