தொடர்ந்து அதிகரிக்கும் பூண்டு விலை: கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.380-க்கு விற்பனை

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் பூண்டு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.380-க்கு விற்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான சமையல் வகைகளுக்கு வெங்காயம், பூண்டு சேர்ப்பது அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக அனைவரும் விரும்பி உண்ணும் பிரியாணிக்கு இவை முக்கியமான பொருளாகும். தமிழகத்தில் தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பூண்டின் விலையும் உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி பூண்டு உற்பத்தியில் தேசிய அளவில் மத்தியப்பிரதேசம் ஆண்டுக்கு 18.49 லட்சம் டன்னுடன் முதலிடத்திலும், 4.16 லட்சம் டன்னுடன் ராஜஸ்தான் 2-ம் இடத்திலும், 2.27 லட்சம் டன்னுடன் 3-ம் இடத்திலும் உள்ளன. தமிழகம் ஆண்டுக்கு 7 ஆயிரத்து 150 டன் உற்பத்தியுடன் 13-வது இடத்தில் உள்ளது.

இதனால் தமிழகத்தின் பூண்டு தேவைக்கு மத்தியப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. அங்கிருந்து கொண்டு வரும் செலவு உள்ளிட்ட காரணங்களால் பூண்டின் விலை எப்போதும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரமாக பூண்டின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று கிலோ ரூ.380 ஆக உயர்ந்து இருந்தது.

இதுதொடர்பாக கோயம்பேட்டில் பூண்டு மொத்த வியாபாரம் செய்து வரும் நந்தகோபால் என்பவர் கூறியதாவது:

பூண்டில் பொடி, லட்டு, முதல்தரம் என பல வகைகள் உள்ளன. இதில் பொடி பூண்டு தற்போது ரூ.205-லிருந்து ரூ.240 ஆகவும், லட்டு வகை பூண்டுரூ.330-லிருந்து ரூ.380 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த பூண்டுதான் அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் முதல்தர பூண்டு ரூ.440-லிருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஏறக்குறைய இதே விலையில்தான் விற்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தைக்கு மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்துதான்அதிக அளவில் பூண்டு வருகிறது. தற்போது சீசன் முடிவடையும் காலம் என்பதால் வரத்து குறைந்துவிலை உயர்ந்து வருகிறது. வரும்ஜனவரி மாதம் வரை விலை உயர்வு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பூண்டு உற்பத்தி தொடர்பாக, தமிழக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் (4695 ஏக்கர்) பரப்பில் பூண்டுவிளைவிக்கப்படுகிறது. கடந்த2023-24ம் ஆண்டில் 17,350டன் பூண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் பூண்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூ.18 லட்சம் செலவில் பூண்டு உற்பத்தி பரப்பை கூடுதலாக 150 ஹெக்டேர் அளவுக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில், மத்தியப் பிரதேசத்தில் 53 சதவீதம் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்கள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE