தமிழ் பல்கலை.க்கு ராஜராஜ சோழன் பெயர்: உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வலியுறுத்தல்

By KU BUREAU

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறினார்.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது ஆண்டு சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். விழாக் குழுத் தலைவர் து.செல்வம் வரவேற்றார்.

விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது: தமிழகத்தில் பல மன்னர்கள் ஆட்சிபுரிந்திருந்தாலும், சிறந்த ஆட்சி நிர்வாகத்தைக் கொடுத்த ராஜராஜ சோழனைத்தான் பெருமன்னன் என அழைக்கிறோம். அவரது ஆட்சிக் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர் ராஜராஜ சோழன்.

அதிக கோயி்ல்களைக் கொண்ட இந்த தெய்வ பூமியில் பிறந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். இறைவனுடைய அருளைப் பெற்றவர்கள். இயற்கையிலேயே பண்பட்ட வாழ்க்கையை வாழ்கிறவர்கள். இங்கு தெய்வ வழிபாட்டுக்கு மாற்றாக, இறை உணர்வுக்கு மாற்றாக எவர் பேசினாலும், எந்த கோட்பாடுகளைக் கொண்டு வந்தாலும் அது எடுபடாது.

வள்ளுவரின் வழியை உள்வாங்கிக் கொண்ட ராஜராஜ சோழன், பசியும், நோயும், பகையும் இல்லாத நாட்டை உருவாக்கினார். இந்த மூன்றும் இல்லாமல் யார் ஆட்சி செய்கிறார்களோ, அவர்கள்தான் நாட்டை ஆளக்கூடிய தகுதி படைத்தவர்கள்.

இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து கம்பீரமாக நிற்கிறது என்றால், அதற்கு ராஜராஜ சோழன் மட்டும் காரணம் அல்ல. கோயில் உள்ளே வீற்றிருக்கும் பெருவுடையாரின் சக்தியும்தான்.

இதுபோல இறைவனுக்கு மிகப் பிரமாண்டமான கோயில்களை அமைத்தவர்கள்தான் தமிழ் மன்னர்கள். காதலிக்கு கட்டிடம் கட்டியவர்கள் மன்னர்கள் அல்ல. அப்படிபட்ட மன்னர்கள், தமிழ் மண்ணிலே இல்லை.

ராஜராஜ சோழனின் புகழ் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அப்படிபட்ட ராஜராஜன் என்ற பெரு மன்னனின் சதய விழாவை தமிழக அரசு நடத்துவதுடன், தமிழுக்கு தொண்டாற்றக்கூடிய, தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜ சோழன் பெயரைச் சூட்ட வேண்டும். அவ்வாறு செய்வது பெருமன்னன் ராஜராஜ சோழனுக்கு செய்யும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், வரலாற்று நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 2-வது நாளான இன்று (நவ.10) கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை நூல்கள் வீதியுலா, பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகம், மாலையில் சுவாமி வீதியுலா, பரதநாட்டியம், விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE