அண்ணா பல்கலை. திருச்சி பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: அண்ணா பல்கலைக்கழக திருச்சி பொறியியல் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் ஒரு நாள் இரவு உள்ளிருப்பு போராட்டம் இன்று மாலை தொடங்கியது.

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில், திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக திருச்சி பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. போராட்டத்துக்கு சங்கத் தலைவர் ஆர்.பிரபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் ஆர்.உதயகுமார் முன்னிலை வகித்தார். 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டத்துக்காக முன்வைக்கும் கோரிக்கைகள் வருமாறு: “முன்பிருந்த திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் முறையாக நியமிக்கப்பட்ட 20 ஆசிரியர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாமலும், அண்ணா பல்கலைக்கழக திருச்சி பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்ட பின், அந்த ஆசிரியர்கள் எந்த விதமான ஊதிய பயன்களும் இல்லாமல் பணியாற்றுகின்றனர்.

எனவே அவர்களின் உரிமையை உறுதி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான பணி உயர்வுத் திட்டம் தாமதப்படுத்தப்படுகின்றது. இது ஆசிரியர்களின் வளர்ச்சியையும், மனநிலையையும் பாதிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு தொடர்ந்து பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், அந்த மனுக்களுக்கு எவ்வித பதிலும் இல்லை. எனவே அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் முறையான பதில் அளிக்கும் வரையிலும் உள்ளிருப்புப் போராட்டம் கல்லூரி வளாகத்தினுள் அறவழியில் பலகட்டங்களாகத் தொடர்ந்து நடைபெறும்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE