தருமபுரி, கிருஷ்ணகிரியில் ரூ.8,000 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி-2 தொடக்கம்: அமைச்சர் சக்கரபாணி

By க. ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் - பகுதி- 2 ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியங்களில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.2 கோடியே 16 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளையும், ரூ.13 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடக்கவிழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைபள்ளிகளில் பயிலும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்து பேசியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில், எல்லோருக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக செயல்பட்டு வருகிறார். அதன்படி மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் சாலைகள் மேம்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் - பகுதி 2 ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 3,827 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பழுதடைந்த தொகுப்பு வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ், ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சுமார் 2 லட்சம் வீடுகள் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கருப்பு, பழுப்பு இல்லாத அரிசி இம்மாவட்டத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த ஆண்டு 10 வகுப்பு தேர்வில் 2-வது இடம் பிடித்துள்ளார்கள். இந்த ஆண்டு மாணவர்கள் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்க ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், ஆசிரியர்கள் ஆகியோர் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பெற்றோர்கள் குழந்தை திருமணம் செய்வதை தவிர்த்து, தங்களது குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை வழங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாவட்டத்தில் இதுநாள் வரையில் 116 நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 47,589 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். குடும்ப அட்டைதாரர்களுக்கு கருப்பு பழுப்பு இல்லாத அரிசி வழங்கப்படுகிறது” என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலைநாகராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், காவேரிப்பட்டிணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், ஊராட்சி தலைவர்கள் மஞ்சுளா (கரடிகுறி), மாதவன் (நடுபையூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE