திருச்சி: துறையூர் காவல் நிலையத்துக்கு பூட்டுப் போட முயன்ற விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரில் விவசாயப் பணிகளுக்காக விவசாயிகள் வங்கிகளில் கடன் உதவி பெற்று டிராக்டர், ஜேசிபி, நெல் அறுவடை இயந்திரம், டிப்பர் லாரி உள்ளிட்ட விவசாய கருவிகள், வாகனங்களை வாங்கி விவசாய பணிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒருசில தவணைகள் கட்ட முடியாவிட்டாலும் வங்கி ஊழியர்கள் அவர்களிடம் உள்ள கூடுதல் சாவியை கொண்டு வாகனங்களை உரிமையாளருக்கு தெரியாமல் எடுத்துச் சென்று விடுகின்றனர்.
இதுபற்றி காவல் நிலையம் சென்று புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துறையூர் காவல் நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து துறையூர் போலீஸார் காவல் நிலையம், பேருந்து நிலையம், முசிறி பிரிவு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (நவ.9) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, துறையூர் காவல் நிலையத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவதற்காக காரில் வந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை துறையூர் பிரிவு சாலை ரவுண்டானாவில் தடுத்து நிறுத்தி அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
» போதைப்பொருள் கடத்தலில் ‘சுந்தரி’ சீரியல் நடிகை கைது!
» புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவ. 15 வரை கனமழை வாய்ப்பு
அவருடன் வந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை எச்சரித்து விடுவித்தனர். இதுதொடர்பாக போலீஸார் பல்வேறு இடங்களில் பேருந்துகள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை சோதனையிட்டதால் துறையூரில் பரபரப்பு ஏற்பட்டது.