திருச்சி: நெல் அரவைக் கூலியை ரூ.150 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரவை முகவர்கள் சம்மேளனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரவை முகவர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அரவைக் கூலியாக ரூ.40 வழங்குவதை ரூ.150 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்குப் பின்னர் பொருளாளர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மாநிலம் முழுவதும் 600 அரிசி அரவை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளிலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு நெல்லை அரைத்து அரிசியாக வழங்கி வருகிறோம். அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் அரவைக் கூலி குவிண்டாலுக்கு ரூ.40 அரசு வழங்குகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 3 முறை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் உதிரிப்பாகங்கள் விலையேற்றம் காரணமாக இந்த 40 ரூபாய் கூலிக்கு அரவை தொழிலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசு குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இல்லாமல், மத்திய அரசின் தேசிய நுகர்பொருள் கூட்டமைப்பும் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது.
» புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவ. 15 வரை கனமழை வாய்ப்பு
» ஒட்டுண்ணி செயலைச் செய்வது பாஜகதான்: பிரதமர் மோடிக்கு தமிழக காங். பதிலடி
ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கொள்முதல் செய்த நிலை மாறி தமிழகம் முழுவதும் நெல் கொள்முதலை விரிவாக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது 7 மாதங்கள் மட்டுமே நெல் அரவைப்பணியை அரசு எங்களுக்கு வழங்குகிறது. தேசிய நுகர்பொருள் கூட்டமைப்பு மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் செய்தால் எங்களது தொழில் பாதிக்கப்படும். ஆகவே, தமிழ்நாடு அரசு அதை அனுமதிக்கக் கூடாது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.