கண்டமனூர்: ஒரு வாரத்துக்கும் மேலாக மழை இல்லாத நிலையிலும், சோலைக்காடுகளில் உருவான செறிவான நீரூற்றுகளால் மூல வைகையில் நீரோட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளான வருசநாடு, மேகமலை, வெள்ளிமலை, அரசரடி, பொம்முராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் சேகரமாகி மூலவைகையாக உருவெடுக்கிறது. இந்த ஆறு மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து அம்மச்சியாபுரம் அருகே முல்லை பெரியாற்றில் இணைந்து வைகை அணைக்குச் செல்கிறது.
2 மாதங்களுக்கு முன்பு வரை மழை இல்லாததால் மூலவைகை வறண்டே கிடந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் மூலவைகையில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் மழை இல்லை. இருப்பினும் முன்னர் பெய்த கனமழையால் சோலைக்காடுகளில் செறிவுள்ள நீரூற்றுகள் அதிகளவில் உருவாகி உள்ளன.
» புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவ. 15 வரை கனமழை வாய்ப்பு
» 2026-ல் திமுக அல்லாத கூட்டணி ஆட்சி: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
மணற்பரப்பு குறைந்த இலை, தழைகளால் உருவான இதுபோன்ற புதர்வெளிகள் மழைநீரை அதிகளவில் தக்கவைத்துள்ளன. தற்போது இப்பகுதியில் மழை இல்லாவிட்டாலும் உயிர்ப்புடன் உள்ள இந்த நீரூற்றுகள் நீரை சிறிது சிறிதாக வெளியேற்றி வருகிறது. இதுபோன்று பல இடங்களில் இருந்து வரும் நீர் ஒருங்கிணைந்து மூலவைகையில் தொடர் நீரோட்டத்துக்கு உதவிகரமாக உள்ளன.
இதனால் மழை இல்லாத நிலையிலும் மூலவைகையில் லேசான நீரோட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''சூரியவெளிச்சம் உட்புகாத அடர் புதர் பரப்பு பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகம் உள்ளன. சுமார் ஆயிரம் அடிக்கு மேல் இதுபோன்ற சோலைக்காடுகள் பரவலாக உள்ளன.
இந்த பஞ்சு போன்ற புதர்வெளிகள் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை அதிகளவு உள்வாங்கி வைத்திருக்கும். மழை குறைந்ததும் இதில் இருந்து நீர்கசிவு தொடங்கும். இவ்வாறு பல இடங்களில் இருந்து வரும் நீர் சேகரமாகி சிறிய ஓடைகளாக மாறி ஆற்றில் இணைகின்றன. இதனால்தான் மழை இல்லாவிட்டாலும் பல நாட்கள் மூலவைகையில் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கிறது'' என்றனர்.