சென்னை: ஒட்டுண்ணி செயலைச் செய்வது பாஜகதான் என்று காங்கிரஸ் பற்றி பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை பதில் அளித்துள்ளார்
இது குறித்து செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், ‘மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். வறுமையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மோடி பேசியிருக்கிறார். 1943-ல் ஏற்பட்ட வங்காள பஞ்சத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அலட்சியமான போக்கின் காரணமாக 30 லட்சம் பேர் பசி, பட்டினியால் மடிந்தார்கள்.
இந்த பின்னணியில் தான் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியாவில் 77 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து, இன்றைய நவீன இந்தியாவை உருவாக்கியதை ஆயிரம் மோடிகள் ஒன்று சேர்ந்தாலும் அதை மறைக்க முடியாது. இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உலக வல்லரசுகளின் வரிசையில் முன்னிலைப்படுத்தி சாதனை படைத்ததில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு பெரும் பங்குண்டு.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் பசி, பட்டினி குறித்து ஐ.நா. மனித வளர்ச்சி குறியீடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகத்தில் உள்ள 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் இருக்கிறது. உலக நாடுகளில் பசியின் அளவை அளவிடுவதற்கும், கண்காணிப்பதற்குமான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சர்வதேச பட்டினி குறியீடு அறியப்படுகிறது.
» நடிகை நயன்தாராவின் டாக்குமெண்ட்ரி டிரெய்லர் வெளியானது!
» ஓயாமல் சத்தம் போட்ட 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை: இரு பெண்கள் மீது வழக்குப்பதிவு
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று மோடி கூறுகிறாரே, அதற்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை? தொடர்ந்து ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறி நவீன கோயபல்சாக பிரதமர் மோடி மாறி வருகிறார்.
மாநில கட்சிகளோடு கூட்டணி அமைத்து, அதை பிளவுபடுத்தி கபளீகரம் செய்து தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பது தான் ஒட்டுண்ணி செயலே தவிர, கூட்டணி கட்சிகளை சமஉரிமையோடு மதித்து ஜனநாயகப்பூர்வமாக செயல்படுகிற இண்டியா கூட்டணியை பார்த்தோ, காங்கிரஸ் கட்சியைப் பார்த்தோ ஒட்டுண்ணி என்று கூறுவதை நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, காங்கிரஸ் கட்சியின் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை வைக்க முடியாத பிரதமர் மோடி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ளவது நல்லது’ என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.