தவணை முறையில் வீட்டுமனை: கோவையில் ரூ. 70 லட்சம் மோசடி செய்தவர் கைது

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில், தவணை முறையில் வீட்டுமனை விற்பதாக கூறி மாதா மாதம் பணம் வசூலித்து ரூ. 70 லட்சத்தை மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் வாரணாசி பாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (61). இவர் கோவை டாடாபாத், இருகூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் தனக்கு கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வீட்டு மனைகள் உள்ளதாகவும், மாதத் தவணையில் குறைந்த விலைக்கு அவற்றை விற்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் இவரது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மாதத்தவனையில் வீட்டுமனை வாங்குவதற்காக பணம் கட்டி சேர்ந்தனர். இவர்கள் தொடர்ந்து தங்களது மாதத் தவணையை இவரது நிறுவனத்தில் செலுத்தி வந்தனர். இந்தச்சூழலில், கோவை சேரன்மாநகரைச் சேர்ந்த பிரசன்னகுமாரி என்பவரும் இவரது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மனை வாங்குவதற்காக மாதத் தவணையில் பணம் கட்டி வந்துள்ளார். இவருக்கு ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நீலிபாளையம் என்ற இடத்திலுள்ள நிலத்தை தங்கராஜ் விற்பதாகச் சொல்லி உள்ளார். இதற்காக பிரசன்னகுமாரி மாதத்தவணையை தொடர்ந்து செலுத்தி உள்ளார்.

கிட்டத்தட்ட ரூ. 3.71 லட்சத்தை இவர் செலுத்திய பிறகு அந்த இடத்தை தங்கராஜ் கிரையம் செய்து கொடுக்காமல் தாமதம் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால், கட்டிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார் பிரசன்னகுமாரி. ஆனால், தங்கராஜ் அதையும் தரவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரசன்னகுமாரி கோவை ரத்தினபுரி போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அவர் தனது புகாரில், மனை விற்பனை செய்வதாக கூறி மாதத் தவணையில் பணம் பெற்று ரூ.3.75 லட்சம் மோசடி செய்த தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதன் பெயரில் போலீஸார் விசாரித்தனர். அப்போது, தங்கராஜ் இதேபோல் மேலும் பலரிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 35 பேர் தங்கராஜ் மீது போலீஸில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை இன்று காலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து சொகுசுக் கார் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் நிறுவன மேலாளர் நாகராஜ் உள்ளிட்டோரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE