சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பில் இயற்கை சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தை இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது.
ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் இயற்கை சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த மாதத்துக்கான இயற்கை சந்தை இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்தச் சந்தையில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகள், துணிப்பைகள், சணல் பொருட்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், எண்ணெய் வகைகள், ஊறுகாய் வகைகள், செடிகள், விதைகள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஓலை பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றுடன் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருட்களும் இந்த சந்தையில் கிடைக்கும். காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த இயற்கை சந்தையை அணுகி வாடிக்கையாளர்கள் தேவைப்படும் பொருட்களை வாங்கிச் செல்லலாம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
» கனமழையால் குன்னூரில் மலைப்பாதையில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சி
» “ஆரியத்தை தான் எதிர்க்க வேண்டும்; திராவிடத்தை அல்ல” - சத்யராஜ் கருத்து