சென்னை: மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட வேளச்சேரி நபர் மற்றும் அவரது தோழிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா உட்புற சாலையில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் ரோந்து சென்ற மயிலாப்பூர் போலீஸார், அங்கு நிறுத்தியிருந்த காரை எடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால், காரில் வந்த வேளச்சேரி சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மயிலாப்பூர் தனலட்சுமி ஆகிய இருவரும் அநாகரிகமாகவும், மிரட்டும் வகையிலும் போலீஸாரிடம் பேசினர்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியது. போலீஸார் 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் தர போலீஸார் ஆட்சேபம் தெரிவித்ததால், அவர்களது மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன. இதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
அப்போது காவல் துறை தரப்பில், ``மனுதாரர்கள் இருவரும் நள்ளிரவில் போலீஸாரிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். எனவே, ஜாமீன் தரக்கூடாது'' என்று வாதிடப்பட்டது. “அதற்காக இன்னும் எத்தனை நாட்களுக்கு அவர்களை சிறையில் வைக்கப் போகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சந்திரமோகன் மட்டும் தினமும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.