பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு: பழைய பாலம் நீரில் மூழ்கியதால் படகு மூலம் காந்தையாற்றை கடக்கும் மக்கள்

By டி.ஜி.ரகுபதி

கோவை: பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே, பழைய பாலம் நீரில் மூழ்கியதால், மோட்டார் படகு மூலம் பொதுமக்கள் காந்தையாற்றை கடந்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், லிங்காபுரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பவானியாற்றில் இணையும் காட்டாறான காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வடக்குப்பகுதியில் உள்ள மறுகரையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் ஆகிய மலையடிவார கிராமங்கள் உள்ளன. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், விவசாயப் பொருட்கள் விற்பனை என அனைத்துத் தேவைகளுக்கும் காந்தையாற்றை கடந்து லிங்காபுரத்தை அடைந்த பின்னரே நகரப் பகுதிக்குச் செல்ல இயலும். இங்கு மக்கள் ஆற்றை கடக்க வசதியாக, கடந்த 2008-ம் ஆண்டு ரூ.4 கோடி மதிப்பில் காந்தையாற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் பாலம் கட்டப்பட்டது. ஆற்றில் நீர் வரும் சமயத்தில் இருக்கும் ஆற்றின் உயரத்தை சரிவர கணக்கிடாமல் இப்பாலம் கட்டப்பட்டதாக அப்போதே புகார்கள் எழுந்தன.

இதனால் மழைக்காலத்தில் காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு, பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்படுவது போன்ற காரணங்களினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, எப்போதெல்லாம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயரம் 97 அடியை கடக்கிறதோ அப்போதெல்லாம் இந்த காந்தையாற்று பாலம் நீருக்கடியில் மூழ்கத் தொடங்கி விடும். இந்தச் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உயர்மட்டப் பாலம் நீரில் மூழ்கத் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பரிசல் மூலம் பொதுமக்கள், மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் ஆற்றைக் கடந்து வந்தனர். இந்நிலையில், பவானி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மோட்டார் படகுகள் இயக்கும் பணி நேற்று (நவ.7) முதல் தொடங்கியது. இதையடுத்து மக்கள் மோட்டார் படகில் ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘லிங்காபுரம் - காந்தவயல் இடையே உள்ள காந்தையாற்றை கடக்க புதிய உயர்மட்டப் பாலம் ரூ.15.40 கோடி மதிப்பில் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி தற்போது 60 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. மந்தமாக நடக்கும் இப்பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE