அரியலூர்: அரியலூரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பொருட்டு துணிநூல் துறையின் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான இடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் இன்று பார்வையிட்டார்.
தொடர்ந்து தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற அரியலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்யில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ''தமிழக முதல்வர் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டத்தில் நான்காவதாக சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதலாவதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கட்டிடம் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் முதற்கட்டமாக 50 விசைத்தறிகளும், அதனைத் தொடர்ந்து கூடுதல் கட்டிடம் அமைத்து மேலும் 50 விசைத்தறிகளும் அமைக்கப்படும். இப்பணிகளை அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
» பாபநாசத்தில் கர்ப்பிணி உட்பட 2 பேருக்கு டெங்கு அறிகுறி
» புதுச்சேரி மீனவர்கள் தயக்கமின்றி போராட்டம் நடத்த முன்வர வேண்டும் - வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
தமிழக முதல்வரின் எண்ணம் நெசவாளர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதாகும். தற்போது நடைபெற்று வரும் சிறிய ஜவுளி பூங்காக்கள் மூலமாக ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை நாளொன்றுக்கு ஊதியமாக நெசவாளர்களுக்கு கிடைக்கப்பெறும்.
மேலும். இங்கு நெய்யப்படும் துணிகள் விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு நெசவாளர்களின் குடும்பத்துக்கு கிடைத்திட வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அரியலூரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைவதற்கான இடம் குறித்து ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை அரசு செயலர் வி.அமுதவள்ளி, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, எம்எல்ஏ-வான க.சொ.க.கண்ணன், கோட்டாட்சியர் ஷீஜா உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமையவுள்ள இடத்தினை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி. உடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர்.