தேனியில் பொலிவிழந்த பழைய பேருந்து நிலையத்தை புதுப்பிக்க முடிவு!

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனியில் பொலிவிழந்த பழைய பேருந்து நிலையத்தை புதுப்பித்து மினி பஸ் உள்ளிட்டவற்றை நிறுத்தவும், பயணிகளுக்கான பல்வேறு வசதிகளை செய்து தரவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட தலைநகர் அந்தஸ்து பெறுவதற்கு முன்பிருந்தே தேனியில் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. நேருசிலை அருகே அமைந்துள்ள இந்த பேருந்துநிலையத்தில் இருந்து நகர, தொலைதூர மற்றும் வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகர வளர்ச்சி மற்றும் வாகனங்கள் அதிகரிப்பினால் இப்பகுதியில் அதிக நெரிசல் ஏற்பட்டது.

ஆகவே கடந்த 2013-ம் ஆண்டு சிட்கோ தொழிற்பேட்டைக்குப் பின்புறம் 7.35 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதற்கு, முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பெயர் சூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து காமராஜர் பேருந்துநிலையம், பேருந்து முனையமாக தரம் குறைக்கப்பட்டது. இதனால் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும் இடமாக இது மாற்றப்பட்டது. இதனால் பேருந்துகளுக்கான நேர அட்டவணை முறை, பிளாட்பாரங்கள் அகற்றப்பட்டன.

அப்போது முதலே இப்பேருந்து நிலையம் பொலிவிழக்கத் தொடங்கியது. கடைகளில் வியாபாரம் குறைந்ததால் பலரும் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்தனர். இரவில் பேருந்துகள் வராததால் இருள் சூழ்ந்தன. மேலும், இப்பேருந்து நிலையத்தின் பெரும்பகுதியில் கட்டண டூவீலர் நிறுத்தம், அம்மா உணவகம், கழிப்பிடம் போன்றவை கட்டப்பட்டன. இதனால் பேருந்து நிலையத்துக்கு உரிய தோற்றத்தையும் வெகுவாய் இழந்தது.

பொதுமக்களைப் பொறுத்தளவில் இப்பேருந்து நிலையமே நகருக்கு அருகிலும், எளிதில் அணுகக் கூடியதாகவும் உள்ளது. ஆகவே பகுதி அளவாக சுருங்கிப்போன இதனை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என்று வர்த்தகர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் தற்போது தொடங்கி உள்ளது.

இதன்படி டூவீலர் கட்டண நிறுத்த ஏலத்தை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், இந்த இடத்தை விஸ்தரிப்பு செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து நகராட்சி கவுன்சிலர் பாலமுருகன் கூறுகையில், ''கவுன்சில் கூட்டத்தில் டூவீலர் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தூய்மைப்படுத்தி மினி பஸ் போன்றவற்றை நிறுத்தவும், பயணிகளுக்கான பல்வேறு வசதிகளை செய்து தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE