வைகை ஆற்றில் நாணல் அடர்ந்து பராமரிப்பின்றி காணப்படும் பார்த்திபனூர் மதகு அணை: சிவகங்கை, ராமநாதபுரம் விவசாயிகள் வேதனை

By இ.ஜெகநாதன்

மானாமதுரை: வைகை ஆற்றில் பார்த்திபனூர் மதகு அணை நாணல் அடர்ந்து பராமரிப்பின்றி உள்ளதால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தலில் வைகை ஆற்றில் பார்த்திபனூர் மதகு அணையை 1975-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்தார். இந்த அணை 534.62 மீ., நீளத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 60.41 மீ கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 25 மதகுகள் உள்ளன. விநாடிக்கு 3,681.16 க.மீ., வெள்ளநீரை இதன் மூலம் வெளியேற்ற முடியும்.

அணையில் இருந்து இடது, வலது என 2 பாசனக் கால்வாய்கள் உள்ளன. மொத்தம் 43.20 கி.மீ., செல்லும் வலது பிரதானக் கால்வாய் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 154 கண்மாய்கள் பயன்பெறும். இதன்மூலம் 32,267 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல் 45 கி.மீ., செல்லும் இடது பிரதானக் கால்வாய் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 39 கண்மாய்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 கண்மாய்கள் என 87 கண்மாய்கள் பயன்பெறும். இதன்மூலம் 35,385 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

ஆனால், மதகு அணை முழுவதும் பராமரிப்பின்றி நாணல், சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இடது, வலது பிரதான கால்வாய் மதகுகள் முகப்புகளிலும் நாணல் மண்டி காணப்படுகின்றன. இதனால் தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும், மதகு அணை அருகே சுற்றுலா பயணிகளுக்காக கட்டப்பட்ட பூங்காவும் சிதிலமடைந்து பூட்டிக் கிடக்கிறது. இதனால் அணையை பார்க்க வருவோர் முகம்சுழித்து செல்லும்நிலை உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE