புதுச்சேரி: மருத்துவக் கல்வியில் புதுச்சேரி மாணவர்களின் இடங்களை விஞ்ஞான ரீதியில் முறைகேடாக என்ஆர்ஐ கோட்டா மூலம் தொடர்ந்து அபகரிக்கப்பட்டு வருவது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநரை அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரி மாநிலத்தில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மருத்துவம் சார்ந்த கல்வி பயில மொத்த இடங்களில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
உயரிய எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட இந்த இட ஒதுக்கீட்டை ஆண்டு தோறும் குறுக்கு வழியில் போலி சான்றிதழ் அளித்து முறைகேடாக அரசின் துணையோடு வசதிபடைத்த மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரியில் 22 இடங்களும், 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 94 இடங்களும் என மொத்தம் 116 இடங்கள் ஆண்டு தோறும் என்ஆர்ஐ கோட்டாவில் நிரப்பப்படுகின்றன.
மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் நுழைவு தேர்வில் கட் ஆப் மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத நிலையில், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறுக்கு வழியில் என்ஆர்ஐ கோட்டாவில் சேர்ந்து வருகின்றனர். இந்த மோசடி புதுச்சேரியில் பல வருடங்களாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மருத்துவக் கல்வியில் என்ஆர்ஐ கோட்டாவை நிரப்புவதற்கு அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு மாஃபியா கும்பலே திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
» மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு திட்டம்: தமிழகத்தில் முதல் முறையாக வடலூர் அருகே துவக்கி வைப்பு
» பொள்ளாச்சி: கேரளாவுக்கு கடத்த முயன்ற 30 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல்
இவ்வாண்டு 116 என்ஆர்ஐ கோட்டாவுக்காக 186 மாணவர்கள் நுழைவுக் கட்டணமாக ரூ.2 லட்சம் செலுத்தி தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். இதில் 116 பேர் தேர்வு செய்யப்பட்டதாக சென்டாக் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 37 மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்யாமல் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
மூன்றாம் கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட 79 மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது அதில் 61 மாணவர்களின் சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களையும் அரசு பரிசீலினை செய்யாமல் மூடி மறைக்கிறது.
இது அகில இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவாகும். இதன் பின்னணியில் சர்வதேச அளவில் குற்றவாளிகள் இருப்பதாக தெரிகிறது. புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை விஞ்ஞான ரீதியில் முறைகேடாக என்ஆர்ஐ கோட்டாவின் மூலம் தொடர்ந்து அபகரித்து வருகின்றனர். இது சம்பந்தமாக துணைநிலை ஆளுநர், தேசிய புலனாய்வு விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் நவீன கல்வி குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி சட்ட ரீதியான நடவடிக்கைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.
இந்த முறைகேட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு தொடர்பு இருந்தால் அந்த கல்லூரியின் அனுமதியை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு பரிந்துரைக்க வேண்டும். இது சம்பந்தமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதிபெற்று துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் புகார் கடிதம் அளிக்கப்படும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.